அரசமைப்பு உரிமை கல்வி மன்றம் மற்றும் பவர் டிரஸ்ட் நிறுவனத்தின் சார்பில் குழந்தை தொழிலாளர் முறையை முழுமையாக அகற்றிட 15 மலை கிராமங்களில் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் ஜூன் 06 முதல் 12 வரை விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.
ஆத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்பேத்கார் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.
ஆத்தூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அப்பள்ளி தலைமை ஆசிரியர், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தின் கையெழுத்து பிரச்சாரத்தினை தொடங்கி வைத்தார்.
இந்த பிரச்சாரத்தில் பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்முடி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். அரசு அமைப்பு உரிமை கல்வி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிதா வரவேற்புரை ஆற்றினார்.

பவர் டிரஸ் நிறுவனத்தின் இயக்குனர் ராமு குழந்தைகளுக்கான உரிமைகள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சர்வதேச அளவில் குழந்தை தொழிலாளர்களுடைய நிலை, சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லாத சூழல், இவற்றையெல்லாம் சரி செய்ய கல்வியே மிகப்பெரிய ஆயுதம் என்றும் 0 முதல் 18 வயது உடைய அனைத்து குழந்தைகளுக்கும் அரசமைப்பு சாசனத்தின்படி 100 விழுக்காடு கல்வியை உறுதி செய்ய வேண்டும் எனவும் 18 வயதுக்கு உட்பட்ட எந்த குழந்தையும் வேலைக்கு அமர்த்தப்படக்கூடாது என்றும் வலியுறுத்திப் பேசினார்.

தமிழகத்தில் 100% இடைநிற்றலை தடுத்து அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு பாலின சமத்துவம் குறித்த கல்வி வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு மனநிலை ஆலோசகர் ஒவ்வொரு பள்ளியிலும் ஏற்படுத்தி குழந்தைகளுடைய பிரச்சனையை கண்காணித்து உடனடியாக தீர்க்கப்பட வேண்டும், குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து தடுக்கும் போக்சோ சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், குழந்தை தொழிலாளர் இல்லாத சமூகம் அமையவும் குழந்தை திருமணம் இல்லாத சமூகம் அமையவும் குழந்தை நேய கிராமங்களை உருவாக்கவும் , போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கவும் அறிவு சார்ந்த ஆசிரியர் பெருமக்களை உறுதுணையோடு பள்ளியிலும் சமூகத்திலும் குழந்தைகளுடைய கல்வி சமூக பாதுகாப்பு ஆகியவற்றை காவல்துறை சமூக நலத்துறை கல்வித்துறை வருவாய்த்துறை தொழிலாளர் நலத்துறை ஆகிய துறைகள் இணைந்து குழந்தைகளின் பாதுகாப்பையும் வளர்ச்சியும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தை குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்றும் ,100 சதவீதம் அனைத்து குழந்தைகளின் கல்வியை உறுதிப்படுத்துவோம் என்றும், ஆசிரியர்கள் குழந்தைகள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள், பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள் மணிமேகலை, அங்கையர்கன்னி லதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பள்ளி ஆசிரியர் அமுதா உறுதி மொழியை வாசித்தார். நிகழ்ச்சியை ஆசிரியர் சகிலா பானு ஒருங்கிணைத்தார்.
2000 குழந்தைகள் மற்றும் ஆயிரம் பொதுமக்கள் கையெழுத்து பிரச்சாரத்தில் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம், குழந்தை திருமணத்தை ஒழிப்போம், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று உறுதிமொழி அளித்து கையெழுத்திட்டனர்.