"சிறகை விரி, வானமே எல்லை” என்ற இலட்சிய முழக்கத்துடன் செயல்பட்டு வரும் தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் 40-வது நிகழ்ச்சி தூத்துக்குடி இரயில் நிலையம் அருகிலுள்ள கத்தோலிக்க ஆயர் இல்ல வளாகத்திலுள்ள இளையோர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அன்னம் காலாண்டிதழ் ஆசிரியர் பணி. ச.தே. செல்வராசு தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். கருவூலத்துறை பணி நிறைவு அலுவலரும் இலக்கிய ஆர்வலருமான எம்.எஸ். செய்யது முஹம்மது ஷெரீப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நெல்லை தேவன் வரவேற்புரையாற்றி, தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் பணிகள், இலக்கிய வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் மற்றும் வாசிப்பு பழக்கத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற சிறப்புரையில், வங்கி மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள நா.மாணிக்கவாசகம் "கர்ணன் குற்றவாளியா?” என்ற தலைப்பில் விரிவான உரையாற்றினார்.
மகாபாரதக் கதாபாத்திரமான கர்ணனின் வாழ்க்கை, அவரது தியாகங்கள், நட்புணர்வு, தர்மசங்கடங்கள் மற்றும் வரலாற்றுப் பார்வைகள் குறித்து பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்த அவரது உரை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதனைத் தொடர்ந்து "அது ஒரு நிலாக்காலம்” என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
நூலை அன்னம் காலாண்டிதழ் ஆசிரியர் பணி. ச.தே. செல்வராசு வெளியிட்டு வைத்தார். நூலின் முதல் பிரதியை கருவூலத்துறை பணி நிறைவு அலுவலர் . எம்.எஸ். செய்யது முஹம்மது ஷெரீப் பெற்றுக்கொண்டார்.
நூலாசிரியர் . சி. பிரபாவதி ஏற்புரையாற்றி, நூல் உருவான பின்னணி, அதில் இடம்பெற்றுள்ள கதைகளின் கருப்பொருள், சமூக வாழ்வியல் அனுபவங்கள் மற்றும் படைப்புப் பயணம் குறித்து விளக்கமளித்தார்.
மேலும் வாசகர்களின் ஆதரவே எழுத்தாளர்களின் மிகப்பெரிய ஊக்கமாக அமைவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து "கவனமா படிங்க ப்ளீஸ்” என்ற கட்டுரைத் தொகுப்பு நூலின் திறனாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வரலாற்று ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள . ஞா. அல்பர்ட் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளின் சமூகப் பார்வை, மொழிநடை, கருத்து ஆழம் மற்றும் வாசகர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விரிவாக மதிப்பீடு செய்தார்.
அதேபோல் ஆசிரியரும் பட்டிமன்றப் பேச்சாளருமான . ம. திபு பாரதி நூலின் உள்ளடக்க சிறப்புகள், சமகாலச் சமூகத்திற்கு வழங்கும் சிந்தனைகள், கட்டுரைகளின் கருத்து செறிவு மற்றும் எழுத்தாளரின் அணுகுமுறை குறித்து பாராட்டுரையுடன் திறனாய்வு செய்தார்.
நூலாசிரியர் ஏ. சாந்தி பிரபு ஏற்புரையாற்றி, தமது படைப்பின் நோக்கம், வாசகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் மற்றும் எழுத்தின் சமூகப் பொறுப்பு குறித்து பேசினார்.
மேலும் நூல் வெளியீட்டிற்கும் திறனாய்விற்கும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் நிறைவாக கலையின் குரல் அமைப்பின் நிறுவனர் கலைவளர்மணி ப.சக்திவேல் நன்றியுரையாற்றினார்.
இலக்கிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வரும் தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் பணிகளை பாராட்டிய அவர், எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் எம்பவர் சங்கர் மற்றும் குமிழ்முனை சைமன் உட்பட எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், கவிஞர்கள், வாசகர்கள், மாணவர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.