நீலகிரி மாவட்டம் உதகையில் அ.தி.மு.க. நகரச் செயலாளராக செயல்பட்டு வந்த சண்முகம் என்பவர் மீது, அதே கட்சியின் ஐடி விங் மகளிர் நிர்வாகி ஒருவர் பணமோசடி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. ஐடி விங் மகளிர் நிர்வாகியான சித்ரா உமேஷ், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தார்.
அந்த மனுவில், சேரிங் கிராஸ் என்.சி.எம்.எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் ஒன்றை தனக்கு பெற்றுத் தருவதாக கூறி சண்முகம் தன்னிடமிருந்து ரூ.4 லட்சம் பெற்றதாகவும், ஆனால் இதுவரை கடை ஒதுக்கீடு செய்து தரப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தாம் வழங்கிய பணத்தையும் திருப்பி வழங்காததால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.
அ.தி.மு.க. ஐடி விங் மகளிர் நிர்வாகி ஒருவர், கட்சியின் நகரச் செயலாளர் மீது பணமோசடி குற்றச்சாட்டுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் உதகை நகரில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.